சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்கள் பொலிஸாரினால் மீட்பு

Report Print Navoj in சமூகம்

சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை இன்று கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை காட்டுப்பகுதியில் வியாபாரத்திற்கு கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

எட்டு அடி தொடக்கம் பத்து அடிகளைக் கொண்ட இருபத்து நான்கு (24) பாலை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை பதினைந்து இலட்சம் ரூபா வரை பெறுமதியானது என மேலும் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மண் மற்றும் மரங்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், இதனை முற்றாக ஒழிக்கும் வகையில் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இரவு ,பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.