தீர்மானிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மாட்டு இறைச்சி

Report Print Theesan in சமூகம்

மக்களுக்கு நகரசபையின் மேலுள்ள மதிப்பு குறைவடைந்து செல்கின்றதென வவுனியா, இறம்பைக்குளம் வட்டார உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினருமான செந்தில் ரூபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் மாட்டு இறைச்சி விற்பனை தொடர்பாக இன்று எமது செய்தியாளர் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா நகரிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களில் நகரசபையினரால் கேள்வி கோரல் மூலம் தீர்மானிக்கப்பட்ட தொகையை விட 100 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் கடந்த முறை இடம்பெற்ற சபை அமர்வின் போது கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதற்கு சபையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும், இன்று வரையில் அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் மக்களுக்கு நகரசபையின் மேலுள்ள மதிப்பு குறைவடைந்து செல்கின்றது.

வவுனியா நகர் மற்றும் கோவில்குளம் பகுதியிலுள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள் நகரசபையின் கட்டுப்பாட்டுப்பாட்டில் உள்ளது.

இதனை கேள்வி கோரல் மூலம் நகரசபையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டபோது ஒரு கிலோ தனி இறைச்சி 750 ரூபாவிற்கும் எலும்புடன் இறைச்சி 650 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறு விற்பனை செய்யப்படவில்லை. இவ்விடயம் குறித்து கடந்த முறை இடம்பெற்ற சபை அமர்வின்போது சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்ததுடன் அத்தீர்மானங்களை நகரசபை உறுப்பினர் லரீப் முன்மொழிந்திருந்ததுடன் நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி இப்பிரேரணையை வழிமொழிந்திருந்தார்.

இந்நிலையில் நகரசபை உறுப்பினர்களினால் சபையில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்துவதில் கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.

இறைச்சிக்கடைகளை கேள்வி கோரல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டபோது விலை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விலைக்கே விற்பனை செய்யவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தனி இறைச்சி ஒரு கிலோ 800ரூபாய் முதல் 860ரூபாய் வரையிலும் எலும்பு இறைச்சி ஒரு கிலோ 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்விடயமானது நகரசபையினால் தீர்மானிக்கப்பட்ட விலையைவிட அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்து சபையில் பல விடயங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு இழுபறி நிலைகள் காணப்படுகின்றன.

இதனால் மக்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை பொதுமக்கள் மாட்டு இறைச்சியை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers