இலங்கையை சுற்றி சாதனை பயணம் தொடர்ந்துள்ள இளைஞன்

Report Print Theesan in சமூகம்

துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை இளைஞன் ஒருவர் முன்னெடுத்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் சிவன்கோவில் வளாகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் இப்பயணம் ஆரம்பமானது.

வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞனே இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இவ் இளைஞன் சாதனைப்பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இலங்கையை சுற்றி 32 நாட்களில் 2125 கிலோமீற்றர் பயணிக்கவுள்ள பிரதாபனின் பயணத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கையின் 25 மாவட்டங்களுக்கு மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பயணிக்கும் பிரதாபனை நாடாளுமன்ற உறுப்பினர், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளனர்.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், எஸ்.காண்டீபன், மக்கள் சேவை மாமணி சேனாதிராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் நிறுவனர் கெ.சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.