வடக்கில் முதன் முறையாக இடம்பெறும் பௌத்த மாநாடு!

Report Print Murali Murali in சமூகம்

வடக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதன்படி, அடுத்த மாதம் 22ஆம் திகதி குறித்த மாநாடு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் வாழும் பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் காணும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் வடக்கில் இவ்வாறான பௌத்த மாநாடுகள் எதுவும் நடத்தப்படவில்லை. எனினும், வடக்கில் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள சுரேன் ராகவன் இதற்கான நடவடிக்கைகளை ஒழுங்கு செய்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் பதவியேற்ற போது அரச செயலளகங்களில் மும்மொழிகளின் பயன்பாடுகள் குறித்து வலியுறுத்தியிருந்தார்.

எனினும், இந்த மாநாடு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.