இராணுவத்தில் பணியாற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை

Report Print Thileepan Thileepan in சமூகம்

இராணுவத்தில் பணியாற்றும் வருமானம் குறைந்தவர்களை தெரிவு செய்து வன்னி படைத்தலைமையகத்தால் வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னி பிரதேசத்தில் இராணுவத்தில் பணியாற்றும் வீடு இல்லாதவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் நன்கொடையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக வவுனியா - பம்பைமடு மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் இரண்டு வீடுகளை அமைத்து பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு வீட்டின் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 61ஆவது மற்றும் 62ஆவது படைப்பிரிவுகளில் பணியாற்றும் நாகராசா மூர்த்தி என்பவருக்கு வவுனியா பம்பைமடுவிலும், தனுஷ்கா பிரதீப் குமார என்பவருக்கு வெலிஒயா பிரதேசத்திலும் வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவத்தில் பணியாற்றும் 5 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் 61ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் கே.டி.சி.ஜி.திலகரத்ன, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கேணல் அனில் பீரிஸ் மற்றும் இராணுவத்தினர், கிராமவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.