சினிமாவை மறந்து ஈழத் தமிழர்களுக்காக துடித்தமையால் சிறைக்கு சென்றோம்! இயக்குநர் அமீர்

Report Print Jeslin Jeslin in சமூகம்

2009ஆம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நான் என்னை சாமானியனாகவோ, சினிமாக்காரனாகவோ எண்ணாது, எம் மக்களுக்கு ஏற்பட்ட அவலத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு நானும் நண்பன் சீமானும் முதன் முறையாக சிறைக்குச் சென்றோம் என தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகின் பிரசித்திப்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகராகிய அமீர் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழர்களுக்காக சிறைச் சென்றவன் நான், எனக்கு புகழையும் வெளிச்சத்தையும் தந்த எம் மக்களுக்கு எல்லாவற்றையும் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே இருந்தது.

அந்த அடிப்படையிலேயே, 2009ஆம் ஆண்டு ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நான் என்னை சாமானியனாகவோ சினிமாக்காரனாகவோ எண்ணாது, எம்மக்களுக்கு ஏற்பட்ட அவலத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு நானும் நண்பன் சீமானும் முதன் முறையாக சிறைக்குச் சென்றோம்.

சிறையில் இருந்து வெளிவந்த பின்னரும் எனது போராட்டம் தொடர்ந்தது, அன்று ஈழத்துக்காக தொடங்கிய எனது பயணம் இன்று அனைத்து தமிழ் சொந்தங்களின் பிரச்சினைகளின்போதும் என்னை முன்னிறுத்தியுள்ளது.

இலங்கை வரவேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாகவிருந்தது, போர் காலங்களில் மறைந்த நடேசன் ஐயா, போர் முடிந்தவுடன் நீங்கள் எங்கள் மண்ணிற்கு வரவேண்டும் என தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த கால கட்டத்தை நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது, போர் நின்று விடும், அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை வந்து மக்களைப் பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தேன், ஆனால் என்னை அழைத்தவரையே பார்க்க முடியாத சூழ்நிலையாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers