மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக அதிகாரிகளுக்கு எதிராக குவியும் புகார்கள்!

Report Print Sethu Sethu in சமூகம்

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகத்திற்கு சேவைபெற வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் பொதுமக்களினால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு கடந்த புதன்கிழமை 2.00 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள மரப்பாலம், சவுக்கடி, மங்களகம உள்ளிட்ட தூர இடங்களில் இருந்து அவசர சேவைகளைப் பெறுவதற்காக வேண்டி பொதுமக்கள் சென்றுள்ளனர்.

இப் பொதுமக்களை பிரதேச செயலக வாயிலை மறித்து நின்ற உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் என மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனால் சேவைபெறச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மிகுந்த சிரமத்தின் மத்தியில் தூர இடங்களில் இருந்து வரும் எங்களை எந்தவித காரணங்களையும் கேட்காது, ஏன் வந்தீர்கள் என்று கூட கேட்காது, இன்று பிரதேச செயலாளரை சந்திக்க முடியாது புதன்கிழமையில் மட்டும்தான் அவரை சந்திக்க முடியும்.

மண் போமிட் பெறுபவர்கள் திங்கட்கிழமை சந்திக்கலாம் எனக் கூறி எங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

இவ்வாறு நாங்கள் பல தடவைகள் ஏமாந்து திரும்பிச் சென்றிருக்கிறோம். ஆனால், புதன்கிழமை நீண்ட தூரத்தில் இருந்து வந்த எங்களை ஆர்ப்பாட்டம் என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

பிரதேச செயலாளர் அவர்கள் ஊழல் செய்கிறார் என்று ஊடகங்களில் செய்தி வந்திருக்கின்றதாகவும், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதால் இன்று எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து எங்களை திருப்பி அனுப்பினார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி மாவட்ட அரசாங்க அதிபர் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்காக சேவை செய்ய வந்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்களை தங்களை பாதுகாப்பதற்காக செய்யப்படும் இது போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுப்பாரா? இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க அதிபரின் பதில் என்ன? என மேலும் தெரிவித்துள்ளனர்.