பிரபல பாதாள உலக தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கியவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் ஹெரோயின் எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதிவெல பிரதேசத்தில் வைத்து ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளினால் இன்று குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 42.4 கிராம் ஹெரோயின் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரரான மதுமகே சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொட லொக்கா, துபாயில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற முக்கிய கொலை சம்பவங்களுடன் அங்கொட லொக்காவிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அவர் துபாயில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், அண்மையில் மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட போது அங்கிருந்து அங்கொட லொக்கா தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து அந்நாட்ட பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது அங்கொட லொக்காவும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.