தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்! ஹட்டனில் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டனில் கடந்த மாதம் 28ஆம் திகதி தற்கொலை செய்து கொண்ட தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் வேண்டும் என கோரி ஹட்டன் சிவில் அமைப்புக்கள் ஒன்று கூடி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஹட்டன் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு செல்லும் நோக்கோடு ஹட்டன் நகரசபைக்கு முன்பாக, நீதிமன்றுக்கு செல்லும் வழியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தலவாக்கலை, வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேசத்தைச் சேர்ந்த தாதி ஒருவர் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவத்தில் தன் உயிரை, அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு மாய்த்து கொண்ட தாதி தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்தியர் மற்றும் அவரின் மனைவியே காரணம் என தனது பெற்றோருக்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஆதாரங்கள் காணப்பட்டும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் ஹட்டன், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதனை, மற்றும் மரண விசாரணை முறையாக முன்னெடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த தாதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இதில் கலந்து கொண்ட சிவில் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

<

Latest Offers