பல பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி அவசியம்! மனோ கணேசன்

Report Print Kumar in சமூகம்

இந்த நாட்டில் பல பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியும் தேவை, உரிமையும் தேவை ஆனால் உரிமைக்காக அபிவிருத்தியை புறந்தள்ளி செயற்பட முடியாது என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த கால யுத்ததினால் நலிவடைந்துள்ள தமிழ் மக்களை ஏனைய மக்களைவிட அதிக கவனத்தில் கொண்டு வளர்த்துவிட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்தில் தாயும் தந்தையுமாகவுள்ள ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருப்பதாகவும் இங்கு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர் எவ்வாறு தமது பிள்ளைகளின் குறைபாடுகளைக்கண்டு நிவர்த்தி செய்கின்றார்களோ அதேபோன்று தமிழ் மக்களின் குறைகளையும் தீர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா நேற்று மாலை சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால் அந்த பிள்ளைகளில் ஒரு பிள்ளை குறைபாடுகளை உடையதாகவும் ஏனைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கும்போது, குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைக்கு தாய், தந்தையர்கள் விசேட கவனம் செலுத்துவார்கள்.

அந்த பிள்ளைக்கு நல்ல சத்துணவுகளை வழங்கி அந்த பிள்ளையின் குறைகளை போக்க செயற்படுவார்கள்.

அதுபோன்று தான் இந்த நாட்டில் கடந்த கால யுத்ததினால் தமிழ் மக்கள் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டனர்.

ஏனைய சமூகங்களை விட பல இழப்புக்களை, அழிவுகளை எதிர்கொண்ட மக்களாக தமிழ் மக்கள் உள்ளனர். அவர்களின் பகுதிகளை வந்து பார்க்கும்போது தெரியும் என்ன பிரச்சினைகள் உள்ளது என்று.

எனவே இந்த நாட்டின் தாய், தந்தையர்களாக இருக்கின்ற ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

Latest Offers