பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு கட்டப்படவேண்டும் : பிரதேச சபை உறுப்பினர்

Report Print Theesan in சமூகம்

பெண் நகரசபை உறுப்பினரின் வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றதுடன் இன்று நகரசபை உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் நாளைக்கு எம்பக்கம் திருப்பப்படலாம் எனவே பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்டப்படவேண்டும் என்று வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த செபநேசராணியின் வீட்டிற்குள் நுழைந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கண்டனச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளாகிய நாங்கள் சமூகத்தில் அச்சமின்றி பாதிக்கப்பட்ட பெண்களின் விடயங்களில் தலையிட்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பக்கபலமாக இருந்து செயற்படும்போது இவ்வாறு சில கயவர்களினால் கொலை அச்சுறுத்தல்கள் அவமானங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இறம்பைக்குளம் பகுதியில் தனிமையிலிருந்த குடும்பப் பெண்னொருவரின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் ஒருவரினால் அப்பெண் துன்புறுத்தப்பட்டு காயப்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சில தினங்களின் பின்னர் குறித்த இளைஞன் அவரது வீட்டிற்குள் அத்துமீறிச் சென்று பெண்ணின் தலைமுடியை அறுத்து எடுத்த சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் மன உளைச்சலையும் சமூகத்தில் பெண்களுக்கு தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.

சம நிலையில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கும் ஆண்கள் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருகின்றனர். பெண்களுக்கு எதிராக சமூகத்தில் ஆண்களினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டப்படவேண்டும். சட்டத்தினூடாக அது மேற்கொள்ளப்படவேண்டும்.

பெண்களுக்கு எதிராக இடம்பெறும் துன்புறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு பொலிஸார் பக்கதுணையாக எம்முடன் இணைந்து செயற்படவேண்டும் இன்று நகரசபை உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் நாளை எமக்கு அல்லது ஏனையோருக்கு ஏற்படுவதற்கு இடம்கொடுக்கக்கூடாது இவ்விடயம் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும்.

இவ்விடயத்தில் பொலிஸார் இளைஞனுக்கு சார்பாக செயற்படாமல் குறித்த இளைஞனை விசாரணைக்குட்படுத்தி நகரசபை உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட மன உளைச்சல், கொலை அச்சுறுத்தல்களுக்கு நீதிமன்றத்தினூடாக தண்டனை பெற்றுக்கொடுத்து பெண்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers