கல்முனையில் நடாத்தப்படவிருந்த ஊர்வலம் திடீரென நிறுத்தம்!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

கல்முனையில் இன்றை தினம் நடாத்தப்படவிருந்த ஆர்பாட்ட ஊர்வலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் தமிழ் இளைஞர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஒரு சமுகத்திற்குள்ளேயே மாறிமாறி ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடாத்தி பிரச்சினைகளை பெரிதாக்காமல் 27ஆம் திகதி சட்டரீதியாக அரச அதிகாரிகள் கூடவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கலாம்.

அதுவரை பொறுமையாக இருங்கள் என மக்களை மாநகரசபை உறுப்பினர் ராஜனும், இளைஞர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறித்த ஆர்பாட்ட ஊர்வலம் கைவிடப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு எல்லையில் வைத்து கடந்த 20ஆம் திகதி கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கல்முனை வாழ் பொதுமக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடாத்தவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அளுநர், கிழக்கு பிரதிப்பொலிஸ் மா அதிபர், மட்டு. அம்பாறை மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோருக்கு எழுதிய அவர்களது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்முனை மாநகரசபைக்குச் சொந்தமான பெரியநீலாவணையில் அமைந்துள்ள சேதனைப்பசளை தயாரிக்கும் நிலையத்திற்கு மாநகரசபை வாகனம் குப்பைகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் போது பெரியநீலாவணை கார்ட்றோட்டில் வழிமறித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கணேசன் தலைமையிலான குழுவினர் பிரச்சினைப்பட்டுள்ளனர்.

அங்கு நின்றிருந்த உறுப்பினர் கணேசன் மேயரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எமது உறுப்பினர்களான ராஜன் குபேரன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தினர்.

எமது வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக உறுப்பினர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடொன்றை பதிவுசெய்துனர். சேதத்துக்குள்ளாக்கப்பட்ட வாகனத்தின் சாரதியும் முறைப்பாட்டை பதிவுசெய்தனர்.

ஆனால் இன்று வரை தாக்குதல் நடாத்தியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எம்மவர் மீது தாக்குதல் நடாத்திய அந்த கும்பலை கைதுசெய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers