கொள்ளையிட்ட பணத்தில் ஆடம்பர பொருட்கள்! யாழில் வசமாக சிக்கிய சகோதரர்கள்

Report Print Sujitha Sri in சமூகம்

யாழில் உணவு விடுதியொன்றில் பணத்தை கொள்ளையிட்டு அதில் ஆடம்பர பொருட்களை வாங்கிய சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவர் வசமாக சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மட்டுவில் மற்றும் உடையார்கட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டி ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாவகச்சேரி நகரிலுள்ள குறித்த உணவு விடுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முகநூல் மூலமாக, உணவு விடுதியின் உரிமையாளரிடம் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவிலைச் சேர்ந்த சந்தேகநபர் குறித்த உணவு விடுதியில் கொள்ளையடித்த பணத்தில் மோட்டார்சைக்கிளையும், உடையார்கட்டை சேர்ந்தவர் அந்த பணத்தில் தொலைக்காட்சி, அலுமாரி, றைஸ் குக்கர், தோடுகள், கதிரை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களையும் வாங்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த பொருட்களை சாவகச்சேரி குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களில் ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் குண்டகசாலை சிறைச்சாலையில் ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பி வந்தவர் எனவும், வவுனியாவில் இடம்பெற்ற இரு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers