காணாமலாக்கப்பட்டிருக்கும் உறவுகளது போராட்டத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு

Report Print Theesan in சமூகம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்தப்படவுள்ள ஹர்த்தாலுக்கும் அவர்களது போராட்டத்திற்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து எமது செய்தியாளர் இன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே நாடாமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த போராட்டத்திற்கும் ஹர்த்தால் அழைப்புக்கும் தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளதுடன் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் நியாயப்பூர்வமானதுடன் அது நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு அன்று தொடக்கம் ஆதரவு வழங்கி வருகின்றது. அவர்களின் கோரிக்கைகள், நீதியானவை - நியாயமானவை.

அந்தவகையில் வடக்கில் முன்னெடுக்கப்படும் பூரண போராட்டத்துக்கு சகல தரப்புக்களும் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்ததாவது,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீண்டகாலம் போராடி வருகின்றார்கள்.

அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எந்தெந்த அரசுகளின் காலப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர்கள், யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்படவேண்டும்.

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடக்கில் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்ததாவது,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிக்காகப் போராடுகின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் நீதி கோரி வடக்கில் முன்னெடுக்கும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா தெரிவித்துள்ளதாவது,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீர் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு பதில் கூறியே ஆகவேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவர்களின் வடக்கு மாகாண ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு மலையக இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், மலையக சமூக ஆய்வு மையம், மலையக உரிமைக்குரல், தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

கிளிநொச்சியில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடபகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் நீண்ட போராட்டத்தினை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்திற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்குவதுடன் கிளிநொச்சிப் போராட்டத்தில் வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே குறித்த போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் வர்த்தகர்கள் கலந்துகொள்ளுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் உறவுகள் தனித்தனியாக போராடி களைத்து விட்டோம்,எனவே அனைவரும் இணைந்து வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து திங்கட்கிழமை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,வர்த்தகர்கள்,அரசியல் பிரதி நிதிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் உறவுகள்.தனித்தனியாக போராடி நாங்கள் களைத்து விட்டோம்.இன்று இரண்டு வருடங்களாக வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் கொட்டில் அமைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக மன்னார் மாவட்டம் சார்பாக நாங்களும் இணைந்து கொண்டிருந்தோம்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கால அவகாசம் வழங்கி இருந்தனர்.

எனினும் குறித்த இரண்டு வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை.நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தொடர்ந்தும் கால அவகாசம் கொடுக்கப்போகின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.எனவே அரசியல் பிரதி நிதிகள்,மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து கால அவகாசத்தை வழங்குவதை நிறுத்துங்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்களின் உறவுகள்.ஒரு தாய் தனது பிள்ளையை தொலைத்து விட்டு படுகின்ற கஸ்டங்கள் எங்களை போன்ற உறவுகளுக்கே தெரியும்.

இந்த நிலையில் குறித்த மனித புதைகுழியில் தற்போது வரை தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

காலம் கடந்தாலும் அவர்களும் எமது உறவுகள்.குறித்த எலும்புக்கூடுகளின் பரிசோதனை தொடர்பில் காலம் தாழ்த்தாது உரிய பதில் கூற வேண்டும்.

காலம் கடந்து செல்கின்ற போது மளுங்கடிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.