மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார், அரச பேரூந்து தரிப்பிடத்தில் இன்று காலை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இச் சூழலில் மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம், இலங்கை அரசாங்கத்தை நீதிப்பொறிமுறையில் இருந்து தப்ப வைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மன்னார் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார், புதைத்தவர்கள் யார் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு, மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திராவினால் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலம் குரூஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.