நெல் விற்பனை செய்ய முடியாத நிலையில் புதுக்குடியிருப்பு விவசாயிகள் விசனம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2018 பெரும்போக நெல் கொள்வனவு நடவடிக்கை முள்ளியவளை மற்றும் துனுக்காய் பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளது.

முல்லைத்தீவு விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எனினும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் நெல் களஞ்சியங்கள் உள்ளபோது அவ்விடங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என குறித்த பிரதேசங்களை சேர்ந்த விவாசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உடையார்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகளை உழவு இயந்திங்களில் ஏற்றி சுமார் 35 கிலோமீற்றர் தூரமாகிய முள்ளியவளை பகுதிக்கு சென்ற சில விவசாயிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் நெற்களை விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் 4 ஆயிரம் ரூபாய் வாகன செலவு மேலதிகமாக ஏற்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நெல் சந்தைப்படுத்துதல் பிராந்திய காரியாலய முகாமையாளரிடம் எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவியபோது ,

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு களஞ்சியங்கள் பல்வேறு பிரதேசங்களில் உள்ளபோதும் முள்ளியவளை ஒட்டுசுட்டான் மற்றும் துனுக்காய் பிரதேங்களில் உள்ள பிரதான நெல் களஞ்சியங்களில் நெல் கொள்வனவு செய்யும் அனுமதி மட்டுமே தற்பொழுது எமக்கு கிடைத்துள்ளது.

மேலும் எம்மிடத்தில் ஊழியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.

முள்ளியவளை மற்றும் துனுக்காய் நெல் களஞ்சியங்கள் முழுமையடைந்ததும் ஏனைய நெல் களஞ்சியங்களில் நெல் கொள்வனவு நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.