கடமைப்பாட்டினை உறுதி செய்வதற்கு சர்வதேசம் முன்வர வேண்டும் : எஸ்.சிவயோகநாதன்

Report Print Kumar in சமூகம்

சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடாக பொறுப்புக்கூறல் கடமைப்பாட்டினை உறுதிசெய்வதற்கு சர்வதேசம் முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவரும் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவருமான எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொறிமுறை தொடர்பில் காலங்களை வழங்காமல் அதனை நிறைவேற்றுமாறு சர்வதேசத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு இணையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவில் பொறுப்புக்கூறவேண்டிய ஒரு காலகட்ட நிர்ப்பந்தத்தில் நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதாக உறுதியளித்திருந்தனர்.

இரண்டு வருடங்களுக்குள் இந்த பொறுப்புக்கூறலை நிறைவுசெய்வோம் என்ற உறுதிமொழியையும் வழங்கியிருந்தனர். அதன் பின்னர் அது தொடர்பில் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலும் மேலும் இரு வருடங்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலப்பகுதிக்குள் செய்யப்படவேண்டியவை செய்யப்படவில்லை.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பாடுகளை செய்யவில்லை. சர்வதேசம் இனியும் காலங்களை வழங்காமல் சரியான பொறிமுறையின் கீழ் இலங்கை அரசாங்கம் பதிலளிப்பதற்கு பொறுப்புகூறுவதற்கு இட்டுச்செல்லவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி கூறவிரும்புகின்றோம்.

700 நாட்களையும் தாண்டியும் பல்வேறு கஸ்டங்களையும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர். அது தொடர்பில் யாரும் கருத்தில்கொள்ளாத நிலையே இருக்கின்றது. அதேபோன்று கேப்பாபுலவு மக்களும் தமது காணி மீட்புக்காக கடந்த இரண்டு வருடமாக போராடிவருகின்றனர்.

நிலைமாறுகால நீதி பொறிமுறையின் கீழ் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. நீதியைப்பெற்றுக்கொடுப்பதற்கான ஆணைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இழப்பீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளபோதிலும் ஆணைக்குழு அமைக்கப்படவில்லை.

அதேபோன்று மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. அரசியல்யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டது ஆனால் அவை நிறைவேற்றப்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவுள்ளது.

யுத்தத்திற்கு முன்னரும் பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்கதையாகவே சென்றுகொண்டுள்ளது.

சர்வதேசம் இந்த விடயங்களில் தலையிட்டு மேலதிக கால அவகாசங்களை வழங்காது சர்வதேச பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும்.

இது தொடர்பில் இன்று பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் குரல்கொடுத்து வருகின்றன. ஜனநாயகமும் நீதியும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கால அவகாசங்களை வழங்காமல் சர்வதேச பொறிமுறைக்கூடாக நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்த வேண்டும்.