கல்முனையை அடைந்துள்ள சைக்கிள் சவாரி இளைஞன்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கையை சைக்கிள் சவாரி மூலம் வலம் வரும் தர்மலிங்கம் பிரதாபன் இன்று கல்முனையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைக்க வேண்டுமென்று கோரி தர்மலிங்கம் பிரபாதாபன் என்ற இளைஞர் இலங்கைப்படத்தை தாங்கியவண்ணம் துவிச்சக்கரவண்டியில் இலங்கையைச் சுற்றி வலம்வந்து கொண்டிருக்கிறார்.

த.பிரதாபன் கடந்த 10ஆம் திகதி வவுனியாவில் வைத்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இவர் 2125 கிலோமீற்றர் தூரத்தை 25 நாட்களில் கடக்க இருக்கிறார்.

இவரை கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று கௌரவித்து உபசரித்ததுடன் இளைஞர்கள் அவரின் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்முனை வடக்கு எல்லைவரை உடன் பயணித்திருந்தனர்.

அத்துடன் பிரதாபனுக்கு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா.முரளீஸ்வரனின் அனுமதியுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் என். ரமேஷினால் விஷேட வைத்திய பரிசோதனையும், இதனைத் தொடர்ந்து வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலயத்தில் இவரின் நலனிற்கும், பயணம் வெற்றி பெறவும் பிரார்த்தனையும் இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பிரதாபனுக்கு பெரியநீலாவணையில் வைத்து அ.நிமால் என்ற இளைஞர் 'தமிழன் 'என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தையும் வழங்கி தனது மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.