தாஜூடீன் கொலை நடந்த தினத்தில் அலரி மாளிகையில் இருந்து சென்ற நான்கு வாகனங்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பளத்தில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டமா அதிபர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க வாதங்களை முன்வைத்தார்.

தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பாக துல்லியமான சில துறைகள் ஊடாக தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக டிலான் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொலை சம்பவம் நடந்த தினத்தில் அலரி மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்ற நான்கு வாகனங்கள் தொடர்பாகவும் அவற்றின் பயணங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றிய இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் சிலரின் நடமாட்டங்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இவர்களின் பயணங்கள் தொடர்பான பதிவேடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் தாஜூடீன் பயன்படுத்தி மடிக்கணனி, செல்போன் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனூடான விசாரணைகளில் முக்கிய தகவல்கள் கிடைக்கவில்லை.

மரணம் நடந்த நேரத்தில் மரணமடைந்தவர் பயணித்த வாகனத்தின் பயண தடங்கள் குறித்து செய்மதி புகைப்படங்கள் வழியாக விசாரணை நடத்தப்பட்ட போதிலு் முக்கிய தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட நீதவான் இசுரு நெத்திகுமார, இந்த விசாரணை சம்பந்தமான சாட்சியங்களை கண்டறிவதில் காணப்படும் முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், விசாரணைகளை துரிதப்படுத்தி, முடிவுக்குமாறும், சாட்சியங்கள் இருக்குமாயின் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான், முறைப்பாட்டாளர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.