கிழக்கு இராணுவத்தளபதி காரைதீவு பிரமுகர்களுடன் சந்திப்பு!

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கை இராணுவத்தின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர காரைதீவு முக்கியஸ்தர்களுடன் ஆக்கபூர்வமாக சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

காரைதீவு பிரதேசசபை மண்டபத்தில் இன்று நண்பகல் பிரதேச சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் இராணுவத்தின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி மேஜர் ஜெயசேன, கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி மேஜர் தர்மசேன, மல்வத்தை நிலையப் பொறுப்பதிகாரி மேஜர் மிலிந்த முதலிகே ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் போது காரைதீவு தமிழ்மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பலதரப்பட்ட இன, மத, நில ரீதியான பிரச்சினைகள் மக்கள் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையுரையாற்றுகையில்,

எமது பிரதேசசபைக்கான காணியில் பல்லாண்டு காலமாக குடிகொண்டிருக்கும் காரைதீவு இராணுவ முகாம் காணியை எம்மிடம் ஒப்படைக்கவிருப்பதாக கடந்த வருடம் இராணுவ உயரதிகாரி கூறினார்.

நாமும் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம். வருமானம் குறைந்த எமது சபைக்கு ஒரு நிரந்தர சந்தையை அமைக்கலாம் என்றெண்ணி அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாரானோம்.

சில நாட்களில் அதே அதிகாரிகள் வந்து எமக்கு 50வீத காணியை தருவதாகவும் மீதி 50வீத காணியில் தாம் தொடர்ந்து நிலைகொண்டிருக்கப் போவதாகவும் கூறினர்.

நான் உடனே முடிவெடுக்காமல் ஊரைக்கூட்டிக் கேட்டேன். அவர்கள் அரசபடையின் உதவி தேவை. எனவே, 50வீத காணியைப் பெறுங்கள் என என்னிடம் ஏகமனதாகக் கூறினார்கள். அந்த முடிவை இராணுவ உயரதிகாரியிடம் சொன்னேன்.

ஆனால் இதுவரை எவ்வித பதிலுமில்லை. காணியுமில்லை. எம்மை அவர்கள் ஏமாற்றி விட்டதான உணர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியிலும் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. அக்காணியைப் பெற்றுத்தந்தால் உதவியாகவிருக்கும் என்றார்.

அதற்குப் பதிலளித்த கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இது விடயமாக உயர்பீடத்துடன் பேசிவிட்டு உரிய பதிலையளிப்பதாகக் கூறினார்.

மக்கள் பிரதிதிகள் கூறுகையில் காரைதீவு எல்லைப்பகுதியில் அடிக்கடி மாட்டெலும்புகள் கொட்டப்படுகின்றன என்று பொலிஸாரிடம் முறையிட்டால் ஆக்கபூர்வமான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படுவதில்லை. இன்றும் மாட்டெலும்புகள் வீசப்படுகின்றன. போதைப்பொருள் மாவா போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை முடிவுக்குக்கொண்டு வர வேண்டும் என்றனர்.

ஆலயத்தலைவர் சார்பில் காரைதீவு அரசடிப்பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான கவடாவில் போக்குவரத்துப் பொலிஸார் தற்போது குடிகொள்கின்றனர். அதனை மீட்டுத்தரவேண்டும். வருவது கும்பாபிசேகம் எமக்கு பல நிர்வாகப்பணிகள் இருக்கின்றன. அந்த கவடா தேவை. அதை மீட்டுத்தாருங்கள் என்றனர்.

இவ்வாறு பல பிரச்சினைகள் தேவைகள் அநிதியான செயற்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இறுதியில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உரையாற்றுகையில்,

காரைதீவு தமிழ்மக்கள் பிரதிநிதிகளுடன் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். உங்களிடமுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகள் மற்றும் ஆதங்கங்கள் பற்றி விரிவாகச் சொன்னீர்கள். அவற்றைக் கேட்கும் போது கவலையாகவிருந்தது. நிச்சயம் என்னால் முடிந்தவரை அவற்றைக் களைய தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். பொய்வாக்குறுதியை தந்துவிட்டு பின்பு அவற்றைச் செய்யாமல் விடும் பழக்கம் எம்மிடமில்லை. எனவே முடிந்தவரை நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

கிழக்கு இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு நினைவுச்சின்னமொன்றை அவர் காரைதீவு தவிசாளரிடம் வழங்கி வைத்தார்.