எங்கள் துயரம் உங்களுக்கு வியாபார பொருளா? எங்கள் கண்ணீர் உங்களுக்கு அரசில் விளையாட்டா?

Report Print Kaviyan in சமூகம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிய போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கையில் வைத்திருந்த அட்டைகளில், தமது உறவுகள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்படக் காரணமாய் இருந்தவர்களைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட வாசகங்களை அகற்றுமாறு கோரியவர்கள் யார்?

ஏன் அவர்கள் அதனை அகற்ற முற்பட்டார்கள்? அந்த வாசகங்கள் ஏன் அவர்களை அச்சமடையச் செய்தன? என சற்றுச் சிந்திப்போமாகவிருந்தால் அதன் உண்மை நிலை தெரியவரும்.

இது தொடர்பான காணொளி தற்சமயம் கிடைக்கப்பெற்று, இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகம் வரை கடந்த 25ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்ட உறவுகள் தமது வலியையும் வேதனையையும் வெளிப்படுத்தும் வகையிலும் தமது உறவுகள் யாரால் கடத்தப்பட்டும், பிடிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் தமது கையில் அட்டைகளை பிடித்திருந்தனர்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை விடுதலை செய்!, இராணுவமே உங்களால் பிடிக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?, இராணுவ ஒட்டுக்குழுக்களே உங்களால் கடத்தப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?, அப்போது எமது உறவுகளைக் கடத்தியவர்கள் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்! மறப்போமா நாம்!, அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்குப் பதில் சொல் நீதியை வழங்கு, எமது உறவுகளைக் கடத்திக் காணாமல் ஆக்கத் துணைபுரிந்த இராணுவ ஒட்டுக்குழுக்களும் பதில் கூற வேண்டும்! உங்களால் கடத்தப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே?' போன்ற வாசகங்களை எழுத்திப் பிடித்திருந்தனர்.

அவ் அட்டைகளில் எழுதப்பட்ட வாசகங்கள் தம்மைச் சுட்டுவதாகவும் உடனடியாக அகற்றுமாறும் அப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலரிடம் கூறியதற்கமைவாக அதனை அவர்கள் அகற்ற முற்பட்ட வேளை மேற்படி கூறப்பட்ட இராணுவத்துணைக் குழுக்களால் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாம் ஏந்தியிருந்த வாசகங்களடங்கிய அட்டைகளை வழங்க மறுத்துள்ளனர்.

அதனால் காணாமல் போனோருக்கான போராட்ட ஆரம்பத்திலேயே குழப்பம் ஏற்றட்டுள்ளதை மேற்படி காணொளி மூலம் அறிய முடிகின்றது.

கடந்த காலங்களில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டும் இராணுவத் துணைக்குழுக்களென அறியப்பட்டும் மக்களால் ஒட்டுக்குழுக்கள் என அழைக்கப்பட்டவர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது கையில் வைத்திருந்த, மேற்கூறப்பட்ட வாசகங்கள் எழுத்தப்பட்டிருந்த அட்டைகளைக் கொடுக்க மறுத்துள்ளனர்.

நாம் எமது உள்ளத்து உணர்வுகளைத் தான் வெளிப்படுத்துகின்றோம். கடந்த காலங்களில் இராணுவமும் அதனோடு சேர்ந்தியங்கிய ஒட்டுப்படைகளும் எமது உறவுகளைக் கடத்தவில்லையா?, இராணுவம் எமது உறவுகளை விசாரணை என்று பிடித்துச் சென்றது அப்படிப் பிடித்துச் சென்ற எமது உறவுகள் பலர் காணாமல் போயுள்ளனர்.

அதேபோல இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய இராணுவ ஒட்டுக்குழுக்களும் எமது உறவுகளைப் பிடித்துச் சென்றது, வெள்ளைவான்களில் கடத்திச் சென்றது அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

எமது உறவுகளைப் பிடித்துச் சென்றவர்களையும் கடத்திச் சென்றவர்களையும் யார் என இனங்காட்டாது அவர்களை யார் எனக் கூறாது எப்படி எமது உறவுகளைக் கண்டறிய முடியும்? எமது உறவுகளை இராணுவம் பிடித்துச் செல்லவில்லை அதனோடு சேர்ந்தியங்கிய ஒட்டுப்படைகள் கடத்தவில்லை என்று கூறினால் அப்ப யார் எமது உறவுகளைப் பிடித்துச் சென்றார்கள்? கடத்திச் சென்றவர்கள் யார்? எமது கண்முன்னே இராணுவம் எமது உறவுகளைப் பிடித்துச் சென்றது!

இராணுவ ஒட்டுக்குழுக்கள் எமது உறவுகளைக் கடத்திச் சென்றன! அதை நாம் எப்படி மறப்பது? அவர்கள் பிடிக்கவில்லை, கடத்தவில்லை எனக் கூறிவிட்டு எமது உறவுகளை யார் பிடித்துச் சென்றார்கள்? யார் கடத்தினார்கள் என்று சொல்வது? நடந்த உண்மைகளை ஏன் மூடிமறைக்க முற்படுகிறீர்கள்? யாரைப் பாதுகாக்க முற்படுகின்றீர்கள்? உங்களை யாரோ தவறாக வழிநடத்துகின்றார்கள்.

அவர்கள் சொல்வதைக் கேட்டு எமது போராட்டத்தைத் திசைதிருப்ப முற்படுகின்றீர்கள், அவர்களைப் பாதுகாக்க முற்படுகின்றீர்கள், நாம் எமது உறவுகளைக் கண்டறிவதற்காக எமது உறவுகளைப் பிடித்துச் சென்ற இராணுவத்தையும் கடத்திச் சென்ற இராணுவ ஒட்டுக்குழுக்களையும் குறிப்பிட்டு அவர்களை விசாரித்து அவர்கள், எமது உறவுகளை எங்கே ஒழித்து வைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துமாறு கோரி நிற்கின்றோம்.

இதற்கு ஐ.நா.சபை உள்ளிட்ட சர்வதேசம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான அவர்களது உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இதில், கடந்த 2012ஆம் ஆண்டு ஐ.நா.வில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்த வேளை கிளிநொச்சி ஏ-9 வீதியில் ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய முன்னாள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரும் தனது குழுவினருடன் கலந்து கொண்டிருந்தார்.

Latest Offers