மன்னார், நானாட்டான் கிராம மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் ஆராய்வு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - நானாட்டான், இலந்தை மோட்டை , தீவுப்பிட்டி கிராம மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அரச காணிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்திற்கு இன்று காலை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தலைமையிலான குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்களின் குடியிருப்புகளுக்கு இடையூறுகள் வழங்குவதாகவும், அங்கிருந்து தம்மை வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறும் குறித்த கிராம மக்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீனிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் விஜயத்தின் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த தாங்கள் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இக் கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், அண்மைக் காலமாக பல இன்னல்களை தாம் அனுபவித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியுதீன், குறித்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினைப் பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார்.