இந்தியத் தேர்தலில் சூடுப்பிடிக்கும் ஈழத்தமிழர் விவகாரம்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

தமிழ்நாட்டு கட்சிகள் பலவும் இந்திய மத்திய தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சென்னை பத்திரிகையாளர் மையத்தில் தொலைத் தொடர்பு காணொளி வாயிலாக நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் முன்வைத்த கோரிக்கை பின்வருமாறு,

  1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்குத் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வு குறித்து தமிழீழத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடாத்தப்ப்பட்டு, அதற்கயை அரசியற்தீர்வு காணப்பட வேண்டும்.
  2. இலங்கை அரசின் தமிழன அழிப்பு குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதற்கீடானதொரு அனைத்துலக பொறிமுறையினூடாவோ விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.
  3. இந்தியா தற்போது மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடாக இருப்பதனால் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
  4. இந்தியாவில் தஞ்சம் கோரிப் பல்லாண்டுகளாகத் தங்கியுள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும்.
  5. இக் கோரிக்கைகளை தங்களின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கி, ஈழத்தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்யுமாறு தமிழக அரசியற் தலைவர்களை தோழமையுடன் வேண்டிக் கொள்கிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழனஅழிப்பு சிங்கள ஆட்சியாளர்களதும், சிங்கள ஆக்கிரமிப்புப் படையினரதும் கொலைவெறியாட்டை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறது.

இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களின் கூட்டுவாழ்வை சின்னாபின்னமாக்கி, தமிழிரின் பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழித்து, தமிழர் பாரம்பரியப்பூமியினைக் கபளீகரம் செய்து, தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து தமிழ் மக்களை இனஅழிப்புக்கு உட்படுத்தும் செயற்பாடுகளைச் சிறிலங்கா அரசு இப்போதும் செய்து வருகிறது.

2009 ஆண்டில் நடைபெற்ற தமிழன அழிப்பு வரலாற்றில் மிகவும் துயரமானதொரு நிகழ்வாகும்.

கூப்பிடுதொலைவில் நமது தொப்புள் கொடித் தமிழ் உறவுகள் எட்டுக்கோடி பேர் இருந்த போதும், ஈழத்தில் தமிழ் மக்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற வேறுபாடின்றி கொத்துக் கொத்தாக இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

தமிழகத்து உறவுகள் நம்மைப் பாதுகாக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொலையுண்டு போனார்கள். இத் தமிழன அழிப்புத் தொடர்பான மிகவும் வேதனையான உண்மையொன்றும் உண்டு.

இந்திய அரசு தமிழினஅழிப்பை மேற்கொண்ட சிங்கள ஆட்சியளர்களுக்கு உறுதுணை வழங்கியது .எனும் இந்த உண்மை வரலாற்றில் இந்திய நாட்டுக்கு களங்கம் சேர்க்கக் கூடியது.

தமிழ்நாட்டுச் சகோதரர்களால் ஈழத் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பை தடுத்து நிறுத்த முடியாமால் போனது ஏன் என்ற கேள்வியும் நமது மனதைக் குடைந்து கொண்டிருக்கிறது.

ஏன் இந்ந இழிநிலை?

இலங்கைத்தீவில் இந்திய ஆதிக்கம் படராமல் தடுக்க வேண்டுமானால் அங்கு வாழும் தமிழ் மக்களை அழித்து பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டம் சிங்கள ஆட்சியார்களிடம் இருக்கிறது என்பதனை மு.திருநாவுக்கரசு போன்ற வரலாற்றறிஞர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

இதனை இன்னொரு வகையில் கூறின் இந்தியாவின் பேராலேயே இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இருந்த போதும் இந்திய அரசு இலங்கை ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணுவதில் கூடுதல் அக்கறை காட்டுவது ஏன்?

தற்போதய உலக அரசியல் ஒழுங்கு நலன்கள் என்ற அச்சில் சுற்றுகிறது. அரசுகள் தமக்கிடையே தம்மை ஒரு குழுவாக ஒழுங்கமைத்துள்ளன. அரசுகளுக்கிடையே உள்ள உறவே அனைத்தலக உறவாக மிளர்கிறது.

இலங்கைத்தீவின் அரசாட்சி சிங்கள தேசத்தின் கைகளில் இருப்பதனால் இலங்கை அரசுடன் இந்திய அரசு பேணிக் கொள்ளும் உறவு சிங்கள தேசத்துக்கு வாய்புகளை வழங்கும் வகையில் அமைகிறது. இங்கு தமிழ் மக்கள் பலிக்கடாக்களாக்கப்படுகிறார்கள்.

இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பில் தமிழ்நாடு வகிக்கும் பங்கு, செல்வாக்கு என்பது அடுத்துக் கவனத்திற் கொள்ள வேண்டியதொரு விடயமாகும்.

இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தும் நிலையில் தமிழகம் இருந்திருக்குமானால் முள்ளிவாயக்கால் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த தமிழக உறவுகளால் முடிந்திருக்கும்.

தீர்வு என்ன?

இலங்கைத்தீவில் இலங்கை தமிழீழம் என இரு அரசுகள் அமைவதே தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், கௌரவமாகவும், இனஅழிப்புக்குள்ளாகாமலும் வாழ்வதற்குரியதொரு அரசியல் ஏற்பாடாகும்.

இந்த ஏற்பாடு இந்திய மக்களுக்கும் நன்மை தரக்கூடியதொன்றாகும். இந்த இரு அரசுகள் தீர்வுஅணுகுமுறைக்கு இந்திய அரசு ஆதரவு வழங்கும்போது உலக ஆதரவும் இத் தீர்வு முறைக்குக் கிடைக்கும்.

இவ் விடயத்தில் தமிழகத்தின் முக்கியமான பங்காக ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கைத்தீவில் இரு அரசுகள் அமைவதற்கு இந்திய அரசின் ஆதரவைப் பெற்றுத் தருதல் என்பதாக அமைய வேண்டும் என்ற வேண்டுகோள நாம் இத் தருணத்தில் முன்வைக்க விரும்புகிறோம்.

இதற்காகச் செயற்படுவதற்கு இந் நாடாளுமன்றத் தேர்தல் காலம் கூடுதல் வாய்ப்புகளைத் தரும். தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும் 'இரு அரசுகள்' தீர்வுமுறையை ஈழத் தமிழர் பிரச்சினைக்குரிய தீர்வ குறித்த தமது நிலைப்பாடாக ஏற்று, இந்தியாவின் ஏனைய மாறிலத் தலைவர்களின் ஆதரவையும் பெறும் வகையில் செயற்படின், அது இந்திய அரசின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தத் துணைபுரியும்.

இந் நிலைப்பாட்டுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் அனைத்து அரசியற் கட்சிகளும் பின்வரும் விடயங்களைத் தமது தேர்ல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு உறுதுணையாக செயற்படுமாறு தோழமையுடன் வேண்டுகிறோம்.

1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்குத் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வு குறித்து தமிழீழத்திலும், புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடாத்தப்ப்பட்டு, அதற்கயை அரசியற்தீர்வு காணப்பட வேண்டும்.

2. இலங்கை அரசின் தமிழன அழிப்பு குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதற்கீடானதொரு அனைத்த்துலக பொறிமுறையினூடாவோ விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

3. இந்தியா தற்போது மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வக்கும் நாடாக இருப்பதனால் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய அரசின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

4. இந்தியாவில் தஞ்சம் கோரிப் பல்லாண்டுகளாகத் தங்கியுள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும்.

இக் கோரிக்கைகளை தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி, ஈழத்தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்யுமாறு தமிழக அரசியல் தலைவர்களை தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.