மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளருக்கு ஏதிரான இலஞ்ச , ஊழல் வழக்கினை விசாரணை செய்யுமாறுகோரி பிரதேச மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் அற்ற சமூத்தினை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தினால் குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரட்ணம் மீதான இலஞ்ச,ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யகோரும் வகையிலான கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச செயலாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முறையிட்டுள்ள நிலையில் முறைப்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் பிரதேச செயலாளர் செயற்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இலஞ்ச ஊழல்களை ஒழிக்கும் வகையில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே தாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும், இங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.