மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்களினால் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளதோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக இன்று பகல் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு நிலுவைகள் இதுவரையில் தங்களுக்கு வழங்கப்படவில்லையெனவும் பல தடவைகள் இது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போதும் நிர்வாகம் தங்களை ஏமாற்றி வருவதாகவும் தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வருடமாகியும் ஏன் தாமதம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம், ஏன் இன்னும் மௌனம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.

எனினும், இந்த பிரச்சினை நாடளாவிய ரீதியில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு விரைவில் தீர்த்துவைக்கும் என சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.