காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சென்று பார்வையிட்ட அமைச்சர்

Report Print Ashik in சமூகம்

சிலாவத்துறை - முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக 15 ஆவது நாளாக இன்று தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,அமைச்சர் றிஸாட் பதியுதீன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சென்று சந்தித்து உரையாடியுள்ளார்.

தமது காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வந்தடைந்துள்ளனர்.

மீண்டும் சொந்த இடங்களுக்கு வந்த மக்கள் முசலியில் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். எனினும் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ச்சியாக தற்காலிக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் 15 ஆவது நாளாகவும் குறித்த போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அமைச்சரிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சருடன் மன்னார்,முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அமைச்சரின் இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஸரீப் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers