துணுக்காய் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம்!

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முன்னாள் போராளி ஒருவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குறித்த முன்னாள் போராளிக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணைகளையடுத்து வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய கிராம அலுவலகருக்கு மாந்தை பிரதேசத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம அலுவலகர், துணுக்காய் பிரதேச செலயகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் போராளிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விசாரணையின் இறுதியில் முன்னாள் போராளியின் வீட்டுத்திட்டத்தில் தொடர்புப்பட்ட கிராம சேவையாளருக்கு முறையாக மாந்தை கிழக்கு பிரிவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தலைமையில் இடம்பெற்ற விசாரண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும் இணைப்பாளருமான ஆர்.எல்.வசந்தராஜாவினால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.