இராணுவ முகாமினை அகற்றக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Navoj in சமூகம்
60Shares

மட்டக்களப்பு - முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும்,போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறும் கோரி பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முறக்கொட்டான் சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன், கு.குணசேகரம், சு.சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு , வாழைச்சேனை பிரதான வீதியில் இராணுவ முகாமிற்கு முன்பாக கூடிய பொதுமக்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எமது காணி எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, பாடசாலை, காணியை உடன் விடுவி, நாம் மரத்தடியிலும், தகரத்தடியிலும் கல்வி கற்பதா, கௌரவ பிரதமரே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை, ஜனாதிபதி அவர்களே ஏன் தமிழ் மக்களுக்கு இந்த நிலை போன்ற வசனங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியுள்ளனர்.

குறித்த போராட்டத்தின் முடிவின் போது ஜனாதிபதிக்கும், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.

இராணுவ முகாமானது 1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து முறக்கொட்டான் சேனை இராம கிருஸ்ண மிஷன் பாடசாலை காணிக்குள் இயங்கி வருகின்றது. இராணுவ முகாமிற்குள் பாடசாலை கட்டடம் உட்பட 52 குடியிருப்பாளரின் சுமார் 11 ஏக்கர் அளவு கொண்ட காணிகள் உள்ளடங்கியுள்ளன.

யுத்தம் முடிவடைந்து 10 வருட காலம் ஆன நிலையில் இன்னும் குறித்த பாடசாலை இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம் அமைந்துள்ள பாடசாலைக் கட்டடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்.

எனவே பாடசாலை மாணவர்களின் கட்டட பற்றாக் குறையினை கவனத்திற் கொண்டு விரைவாக பாடசாலை கட்டடத்தினை விடுவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தேவபுரம், களுவன்கேணி கிராமங்களுக்கான பிரதான வீதியினையும் திறந்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினை கேட்டுக்கொள்வதாக குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் 11.03.2019 ஆம் திகதி ஜனாதிபதியினை சந்தித்து இதற்கான தீர்வினை பெற்று தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவ முகாம் வேறு இடத்திற்கு செல்வதற்கான அடிப்படைத் தேவைகளை ஜனாதிபதி தமது நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்து தருவதாக குறிப்பட்டிருந்தார், இருந்த போதிலும் ஏன் இன்னும் குறித்த இராணுவ முகாம் விடுவிக்கப்படவில்லையென சந்தேகம் ஏற்படுகின்றது, இதில் ஏதும் அரசியல் பின்னணி உள்ளதா என்ற சந்தேகமும் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.