வவுனியாவில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுவன்! தாயாருக்கும் தொடர்பு?

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, நெடுங்கேணி, பெரியமடு பகுதியில் எட்டு வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா, சிறுவனின் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரியமடு பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற சிறுவன் கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினூடாக சென்றிருந்த நிலையில் சிறுவன் காணாமல் போயுள்ளதாக தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பொலிஸில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், 35 இலட்சம் ரூபா தந்தால் அவரை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது.

காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதுடன், கடத்தப்பட்ட சிறுவனும் இதன்போது தொலைபேசியில் பேசியுள்ளார்.

குறித்த தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொண்ட கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதனடிப்படையில் வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயாருடைய சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் பின்னர் கடத்தல் நாடகத்தின் பின்னணியில் சிறுவனின் தயாரும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த கடத்தல் நாடகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டர்சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, விசாரணைகளின் பின் மூவரையும் வவுனியா நீதமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.