மகளிர் தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கும் காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் உறவுகள்

Report Print Nesan Nesan in சமூகம்

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் உறவுகள் இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கின்றனர்.

இந்த நிலையில் அம்பாறை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் காரியாலயத்திற்கு எதிரில் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சங்க உறுப்பினர்கள்,

இன்றைய மகளிர் தினத்தை நாம் ஒரு கறுப்பு தினமாக அனுஸ்டிக்கின்றோம். காரணம் பெண்களாகிய எமக்கு எந்த உரிமையும் சுதந்திரமும் கிடைக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின் கடத்தப்பட்ட எமது உறவுகளை தேடி நாம் வீதியில் 11 வருடங்களாக போராடி கொண்டு இருக்கின்றோம் இதனை இந்த அரசாங்கமும் சர்வதேசமும் கவனிக்காமல் உள்ளது.

ஆகையினால் நாம் இன்றைய தினத்தை முற்றாக கறுப்பு நாளாக அனுஸ்டிப்பதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணம் ஒன்றிணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினரின் பாரியளவிலான போராட்டத்தில் நாம் அம்பாறை மாவட்டம் சார்பில் சகல அமைப்புக்களையும் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

அத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 40 ஐ.நா சபை அமர்வில் 20ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஐ.நா சபையின் ஆணையாளர் வெளியிடவுள்ள அறிக்கையானது இந்த சந்தர்ப்பத்தில் 19ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்.

அந்த வகையில் அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கத்தினர் பூரண கடையடைப்பு செய்து ஆதரவு வழங்குவதுடன் பேருந்து போக்குவரத்துக்களையும் ஸ்தம்பிதமடையச்செய்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க உறுதுணை வகுக்குமாறு வேண்டி நிற்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.