இறுதி யுத்தத்தில் காணாமல்போன பிள்ளைகள் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள்?

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப்படை முகாம் மற்றும் இராணுவமுகாமிற்குள் காணாமல் போனோரின் உறவினர்களின் பிள்ளைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் குடும்பங்களின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஷ்வரி இதனை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பிலக்குடியிருப்பு விமானப்படை முகாம் மற்றும் கேப்பாப்புலவு இராணுமுகாமிற்குள் காணாமல் போனோரின் உறவினர்களின் பிள்ளைகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக எமக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடமும், மனித உரிமை ஆணைக்குழுவிடமும் நாங்கள் பலமுறை தெரியப்படுத்தியுள்ளோம்.

அவர்கள் அதுபற்றி எங்களை தீவிரமாக விசாரிக்க சொல்கின்றார்கள். நாங்கள சட்டவிரோதமாக இராணு முகாமிற்குள் செல்லமுடியாது. எனவே அவர்கள்தான் இது தொடர்பில் இராணுவ முகாமிற்குள் சென்று விசாரித்து பார்க்க வேண்டும்.

மேலும் எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கின்றது. காணாமல் போன எங்களுடைய பிள்ளைகள் அங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான தகவல் எமக்கு கிடைத்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.