2019ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளை அரசாங்கம் புறக்கணிக்கத்துள்ளதாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தால் இன்று காலை கல்முனையில் பட்டதாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எம். நஷுறுடீன் தலைமையில் ஊடகசந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தலைவர், அரசாங்கத்தினால் தொடர்ந்தும் வேலையில்லா பட்டதாரிகள் ஓரங்கட்டுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதியும், பிரதமரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருபதுஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தார். ஆனால் அவை கிடப்பில் போடப்பட்டு இந்த பட்ஜெட்டில் கூட புறக்கணித்துள்ளனர்.
கட்டாக்காலி நாய்கள் விடயத்தில் செலுத்திய கவனத்தில் ஒருதுளியளவும் பட்டதாரிகள் விடயத்தில் செவிசாய்க்கவில்லை என ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தினர்.
இதன்போது கடந்த இரண்டு வருடங்களில் 156 நாட்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் கண்துடைப்பிற்காக சில போட்டி பரீட்சைகள் இடம்பெற்று பின்னர் இரத்துச்செய்யப்பட்டன.
பட்டதாரிகளின் பணி நியமனத்தில் கிழக்கில் சிறுபான்மை அரசியல் தலைவர்கள் வாய்மூடி இருந்துவருகின்றனர். சிறுபான்மை அரசியல் தலைவர்களது இத்தகைய செயற்பாடு கல்வி கற்ற சமூகத்தினரிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களான சந்திரிக்கா அம்மையார், மகிந்த ராஜபக்ஷ கற்ற சமூகத்தை மதித்து செயற்பட்டனர்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் இப்போதைய ஆளுநர் ஆயினும் பட்டதாரிகள் விடயத்தில் மௌனிகளாகவே இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஏழாயிரம் வேலையில்லா பட்டதாரிகள் கிழக்கில் இருக்கின்றனர்.
பட்டதாரிகள் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்வாறான அசமந்த போக்கினை தொடர்வார்களாயின் நாடு பூராகவும் உள்ள ஐம்பத்து ஏழாயிரம் பட்டதாரிகளும் அவர்களின் குடும்பங்களும் எதிர்கால தேர்தல்களில் எதிர்த்து செயற்படும் என்பதனை சுட்டிக்காட்டினார்.