வவுனியாவில் கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு : மக்கள் முற்றுகைப் போராட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - ஓமந்தைப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடுமாறு அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

குறித்த போராட்டம் இன்று மாலை 4 மணியில் இருந்து 7 மணிவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி, சைவ வழிபாட்டுத் தளம், அம்மாச்சி உணவகம், வவுனியா தெற்கு பிரதேச சபை உப அலுவலகம் என்பவற்றை அண்மித்து ஓமந்தை ஏ9 வீதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று இன்று திறக்கப்பட்டது.

குறித்த மதுபான சாலையை திறப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள், கிராம மக்கள் அதனை எதிர்த்து வந்தனர்.

இருப்பினும் மதுபானசாலையை அமைத்த நபர் தனது அரசியல் மற்றும் பொருளாதார பலத்தை வைத்து ஒரு சிலரின் அனுமதியைப் பெற்று இன்று திறந்து வைத்துள்ளார். இதனை திறந்து வியாபாரம் செய்ய முற்பட்ட நிலையில் ஒன்று திரண்ட மக்கள் மதுபானசாலையை மூடுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபானசாலைக்கு செல்லும் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த ஓமந்தைப் பொலிஸார் கலகம் அடக்கும் பொலிஸாரை வரவழைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தணிகாசலம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் து.நடராஜசிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான பூ.சந்திரபத்மன், கோ. அஞ்சலா ஆகியோர் வருகை தந்து மக்களுடனும், மதுபானசாலை உரிமையாளருடனும் கலந்துரையாடியிருந்தனர்.

மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையடுத்து எதிர்வரும் திங்கள் கிழமை குறித்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து அரச அதிபருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஓமந்தைப் பொலிசார் வாக்குறுதியளித்தனர்.

ஆனாலும் மதுபானசாலை அதுவரை பூட்டப்பட வேண்டும் அல்லது தொடர்ச்சியாக போராடுவோம் என ஆர்ப்பாட்டங்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மக்களின் அழுத்தம் காரணமாக எதிர்வரும் திங்கள் கிழமை அரச அதிபருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கும் வரை மதுபானசாலையை தற்காலிகமாக பூட்டுவதற்கு உரிமையாளர்கள் இணங்கியத்திற்கு அமைவாக 7 மணியளவில் மதுபானசாலை பூட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.