மஹிந்தானந்தவின் மகன் மீண்டும் கைது? தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த பொலிஸ் அதிகாரி மரணம்

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் டிபென்டர் வாகனத்தில் மோதுண்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரியை, டிபென்டர் ரக வாகனத்தில் வந்தவர்கள் மோதியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் இடம்பெற்ற மறுதினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு - பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற நபர்களை பொலிஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த குறித்த பொலிஸ் அதிகாரி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததையடுத்து பிணையிலி விடுதலை செய்யப்பட்ட எழுவரும் மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.