அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனம் ஒளித்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிப்பு

Report Print Mubarak in சமூகம்

கந்தளாய் - அக்போபுர பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான ஜீப் வண்டியொன்று வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வாகனம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கந்தளாய் – சீனிபுர பகுதியில் குறித்த வாகனம் மாடு மீது மோதி விபத்துக்குள்ளானதாக கடந்த 26 ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இந்த வாகனம் தமக்கு வழங்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

விபத்து கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றாலும் அண்மையில் பிரதமர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததால் முறைப்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

KC-0443 என்ற இலக்கம் கொண்ட குறித்த வாகனம் மோட்டார் வாகன திணைக்கள தரவுகளுக்கு அமைய வெளிவிவகார அமைச்சுக்கு சொந்தமானவொன்றாகும்.

2006 இல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி விற்கவோ, மாற்றவோ, அழிக்கவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.