மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு சர்வமதத் தலைவர்கள் வேண்டுகோள்!

Report Print Kumar in சமூகம்

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி எதிர்வரும் 19ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு மற்றும் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பு இன்றைய தினம் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியது.

குறித்த ஊடக சந்திப்பு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் இங்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் சங்கம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்றைய தினம் வர்த்தக நிலையங்களை பூட்டியும் போக்குவரத்துக்களை இடை நிறுத்தியும், பொதுமக்கள் தமது பயணங்களை நிறுத்தியும், மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணிக்கு ஒத்துழைக்குமாறும் மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளார் ஏ.ஜே.எம்.மௌலவி இலியாஸ் முகமட், சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள், தென்னிந்திய திருச்சபையினை சேர்ந்த ருட்பணி ஜே.எஸ்.ரூபன்,சிவஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதன் காரணமாக இன்று அந்த மக்கள் சர்வதேசத்திடம் நீதிகேட்டு நிற்கும் நிலை உருவாகியுள்ளதாக ஏ.ஜே.எம்.மௌலவி இலியாஸ் முகமட் இங்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேசம் இது தொடர்பில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு அனைத்து இன,மத மக்களும் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும்.

அன்றைய தினம் தங்களது வர்த்தக நிலையங்களை போக்குவரத்தில் ஈடுபடுவோரும் ஏனைய தொழில் செய்வோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரச்சினை தங்களது பிரச்சினையாக கொண்டு ஒரு நாள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதுடன் அன்றைய தினம் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Latest Offers