யுத்தம் இல்லை! பாதுகாப்புத் துறைக்கு ஏன் இவ்வளவு நிதி? ஏற்கமுடியாத தொகை

Report Print Kumar in சமூகம்

யுத்தம் இல்லாத தற்போதைய காலத்தில் பாதுகாப்புத் துறைக்கு நிதி அதிகரித்துக் காட்டப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

புதிய வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. குறிப்பாகக் கம்பெரலிய திட்டம், வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் என்ற அடிப்படையில் 5000 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 15000 செங்கல் வீடுகள் அமைத்தல் என்ற விடயங்கள் சொல்லிப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று வடக்கு, கிழக்கு அபிவிருத்தி விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்படுவதாக இந்த வரவுசெலவுத் திட்டத்தில் கூறப்படுகின்ற போதிலும் அது எவ்வாறு மேற்கொள்ளப்படப் போகின்றது என்ற விடயம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

ஒதுக்கப்பட்டுள்ள நிதியம் எந்த அளவிற்கு வழங்கப்படப் போகின்றது அதிலும் கிழக்கு மாகாணத்திற்கு எந்தளவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்கின்ற கேள்விகள் இருக்கின்றது.

இவை நடைமுறைச் சாத்தியமாகும் போதுதான் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பயன் கிடைக்கக் கூடியதாக இருக்கும்.

இதனை விட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அதே போன்று விசேட தேவையுடையவர்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட 3500 ரூபா 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பூங்காக்கள் அமைத்தல், தானியக் களஞ்சியங்களை உருவாக்குதல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளுக்கு 2500 ரூபா, ஓய்வூதியர்களுக்கு 1500 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியாக இருக்கின்றது. கம்பெரலிய திட்டத்தின் மூலம் 4800 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 10 லெட்சம் மக்கள் கழிப்பறை வசதியில்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்காக 400 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்ப்பாசன விடயங்கள் வீதி அபிவிருத்தி விடயங்கள், பசுமைப் பூங்கா அமைத்தல் போன்ற விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் இவற்றை நடைமுறைச் சாத்தியமுள்ளதாக மாற்றும் போது தான் மக்கள் பயனடைவார்கள், கோட்பாட்டு ரீதியான, எண்ணக்கருக்கள் ரீதியான கருத்துக்கள் எந்தளவுக்கு மக்களுக்கு பயனைக் கொடுக்கும் என்பதை எதிர்காலத்தில் தான் காணமுடியும்.

இந்தக் கம்பெரலிய திட்டம் ஓரளவுக்கு மக்களுக்கு அந்தந்தப் பிரதேசத்தில் காணப்படுகின்ற சிறு சிறு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு உதவக் கூடியதாக இருக்கின்றது.

அபிவிருத்தி என்ற விடயத்தில் தற்காலிக அபிவிருத்தியை விட நிலையான அபிவிருத்தி என்பது தான் மிகவும் முக்கியமானது. நிலையான அபிவிருத்தி எனும் போது நிலைத்திருக்கக் கூடிய ஆலைகள், பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்தப் பண்ணைகளில் தொழில் வாய்ப்பற்று இருக்கும் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டு தொழில்வாய்ப்புகள் கொடுக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும்.

இன்று பட்டதாரிகள் அவர்களின் தொழில்களுக்காகப் போராட்டங்களை நடாத்திக் கொண்டடிருக்கின்றார்கள்.

2012ம் ஆண்டில் இருந்து அவர்கள் தொழில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதே போன்று அவர்களது வயதெல்லையும் கடந்து செல்லுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற அடிப்படையில் விசேடமாக நோக்கி இவ்வாறான பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

தொழில்வாய்ப்பு அல்லாமல் இளைஞர் யுவதிகள் இருப்பதென்பது நாட்டுக்கு சுமையான விடயம். அவர்களுக்குரிய தொழில்வாய்ப்புக்களைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.

எனவே நிலையான அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் பண்ணைகள் தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூலம் தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைச் சாத்தியமாக்குகின்ற வகையில் இறுக்கமான கட்டுப்பாடுகள் இல்லாமல் கொடுக்கப்படுகின்ற போது அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொள்வது இலகுவாக இருக்கும். ஆனால் வங்கிகள் கூடுதலான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற போது இவை சாத்தியமற்ற தண்மையை அடைகின்ற நிலைமை காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு 6000 ரூபா கொடுப்பனவு என்கின்ற விடயம் உண்மையில் அவர்களை வேதனைக்குட்படுத்துகின்ற ஒன்றாகவே இருக்கும்.

ஏனெனில் இழக்கப்பட்ட மனித உயிர்களின் பெறுமதிக்கு இந்தத் தொகை எவ்வளவுக்கு ஈடுகொடுக்கும் என்பது வேதனையான ஒரு விடயம்.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்கின்ற நீதியான தீர்ப்பு கிடைக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர்களுக்கான கொடுப்பனவுகள் பற்றி தீர்மானிக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விடவும் இந்தப் பாதீட்டில் பாதுகாப்புச் செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடானது 2009ம் ஆண்டை விட 121 வீதமாகவும் கடந்த வருடத்தை விட 32 வீதமாகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

2009ம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 17706 கோடி ரூபாய்கள் பாதுகாப்புச் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது யுத்தம் இல்லாத சூழ்நிலையில் 39307 கோடி ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புச் செலவீனம் அதிகமாகக் காட்டப்படுவது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பினும் யுத்தம் இல்லாத தற்போதைய காலத்தில் இது அதிகரித்துக் காட்டப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகவே இருக்கின்றது.

துண்டு விழும் தொகை சென்ற முறையோடு ஒப்பிடும் போது குறைக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாதுகாப்புச் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட அபரிவிதமான நிதியினை மேலும் குறைப்பதன் மூலமாக துண்டு விழும் தொகையினை இன்னும் அதிகமாகக் குறைத்திருக்க முடியும்.

விவசாயத்துறை, சுகாதாரத்துறை, கல்வித்தறை, வீடமைத்துறை, உட்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதியை ஒதுக்குவதென்பது சமூக வளர்ச்சிக்கான பாதீட்டின் அடிப்படை அம்சங்களாக இருக்கும்.

நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு சுதந்திரமான நிலை என்றெல்லாம் சொல்லிவிட்டு மொத்தத் தேசிய உற்பத்தியில் 17 வீதமான நிதியினை பாதுகாப்புச் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்டதென்பது கேள்விக்குரிய விடயமாகும். இதில் உள்ள மர்மம் என்ன என்பது புரியாத ஒன்றாக இருக்கின்றது.

எனவே இந்தப் பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைத்து சமூக அபிவிருத்திக்காகப் பயன்படுத்த முடியும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், அங்கவீனமாக்கப்பட்டவர்கள், சமூகத்திலுள்ள அப்பாவி மக்கள், குடும்பத் தலைதாங்கும் பெண்கள் என்போரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு இந்தப் பாதுகாப்புச் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட கணிசமான தொகையில் ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தால் தர்மமாக இருந்திருக்கும்.

எனவே சமூக அபிவிருத்திக்குக் கூடுதலான நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும். நிலையான அபிவிருத்திக்குரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தொழில்வாய்ப்புகளுக்காக ஏங்குகின்ற இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இருக்கின்ற பல்வேறு துறைகளை மேம்படுத்தி அந்தத் தொழில்வாய்ப்புகளை வழங்கி இளைஞர் யுவதிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு விரக்தியான நிலைமையினை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய தேவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தமாக உள்வாங்கப்பட வேண்டும்.

வரவுக்கு மிஞ்சிய செலவாகவே ஒவ்வொரு வரவு செலவுத் திட்டங்களும் அமைகின்றது. அதிலும் அதிகூடிய செலவு பாதுகாப்புச் செலவாகவே இருக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தலாவருமானம் என்கின்ற விடயத்தைப் பார்ப்பதை விடுத்து தனியாள் கடன் என்கின்ற விடயத்தையே பார்க்க வேண்டி இருக்கின்றது.

எதிர்காலத்தில் பிறக்கப் போகின்ற சந்ததிகளுக்குக் கூட இந்தக் கடன்சுமை சுமத்தப்படப் போகின்ற தன்மை காணப்படுகின்றது.

எனவே பாதுகாப்புச் செலவீனத்திற்காக ஒதுக்கப்படுகின்ற அபரிவிதமான நிதியினைக் குறைத்து இயன்வரைக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு, மீள்கட்டுமானங்களைச் செய்வதற்கும், மீள்குடியேற்றம் செய்வதற்கும் அந்த நிதியினை ஒதுக்குவதுதான் சாலச் சிறந்ததாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக எத்தனை வரவு செலவுத் திட்டங்கள் எத்தனை அபிவிருத்தி விடயங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தேசியப் பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் காணும் வரையில் எவ்வித நிரந்தர அபிவிருத்தியும் இந்த நாட்டில் நிலவப் போவதுமில்லை நாட்டின் கடன் சுமையும் குறையப் போவதுமில்லை என்றார்.