பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வவுணதீவு மக்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மக்கள் குடிநீர் வழங்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை ஈடுபட்டுள்ளனர்.

வவுணதீவில் உள்ள தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் நீர்விநியோக பகுதியை மறித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உன்னிச்சைகுளத்தில் இருந்து குறித்த நீர்வழங்கல் நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.

ஆனால் குறித்த நீர் விநியோக திட்டத்தின் ஊடாக உன்னிச்சை உட்பட அதனை அண்டிய பகுதிகளுக்கு நீர் கிடைப்பதில்லை எனவும், கடந்த 10 வருடத்திற்கு மேலாக இது தொடர்பிலான கோரிக்கைகளை தாங்கள் முன்வைத்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த கால யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமையினாலும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டதுடன் மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன், சீ.யோகேஸ்வரன், நீர்வழங்கல் அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் பிரகாஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

குடிநீர் விநியோகத்திற்காக ஆறு கோடி ரூபாவுக்கும் மேல் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தற்போது உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த பகுதியிலும் நீரைபெற்று கொள்ள முடியாத நிலையினை தாங்கள் ஏற்படுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.