உருவ பொம்மையை எரியூட்டி மட்டக்களப்பில் கூட்டமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Dias Dias in சமூகம்

முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் சகாக்களின் தூண்டுதலின் பேரில் கூட்டமைப்பின் முக்கியஸ்தரொருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு எதிராக கிரான் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த பகுதி மக்கள் கூறுகையில்,

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் கிரான் பகுதியில் சிலருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை ஏனையவர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.

இதனால் தலையில் காயமடைந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.

இவ்வாறான நிலையில் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரின் பணிப்புரைக்கு அமைவாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது இவ்வாறிருக்க முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) சகாக்கள் மற்றும் மண் மாபியாக்கள் இந்த விடயத்தை முழுமையாக மாற்றி, சமூக பிரச்சினையாக சித்தரித்து மக்களை தூண்டிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கருணாவின் ஒரு சில சகாக்கள் மற்றும் மண் மாபியாக்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினரின் பணிப்புரையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தமக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளதுடன், அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினரது பெயர் குறிப்பிடப்பட்ட உருவ பொம்மையொன்று வீதியில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களால் எரிக்கப்பட்டுள்ளது.