முள்ளி பொத்தானை பாத்திமா பாடசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா, முள்ளிப் பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இப்பாடசாலையில் 08 வகுப்பறைகள் மட்டுமே காணப்படுகின்ற நிலையில் 18 வகுப்பறைகள் தேவையாக உள்ளது. 10 வகுப்பறைகள் மர நிழல்களில் காணப்படுகின்றன.

இதில் ஒரு பழமை வாய்ந்த பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதுடன் அக் கட்டிடத்தில் எந்த வகுப்பறைகளும் வைக்க முடியாத அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றது.

வகுப்பறை ஒன்றில் சீட் போடப்பட்டுள்ளதினால் அதிகளவு வெப்பநிலை காணப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் அடிக்கடி சுகவீனமுற்று வீடு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப் பாடசாலையில் ஆசிரியர் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இடை நிலை பிரிவுக்கு 5 ஆசிரியர்களும், உயர்தரப் பிரிவுக்கு ஒரு ஆசிரியரும் உள்ளநிலையில் 06 ஆசிரியர்கள் தேவையாக உள்ளதாகவும் இப் பாடசாலை அதிபர் ஏ.ஆர். சாதிக்கின் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

இப் பாடசாலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மாவட்ட அரசியல்வாதிகள் அடிக்கடி கலந்து கொண்டு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாகவும், ஆனால் கட்டிடங்கள் ஒன்றும் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.