யாழில் நிரந்தர மருத்துவ சேவை வழங்க கோரி உணவு ஒறுப்பு போராட்டம்

Report Print Sumi in சமூகம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் உள்ள வைத்தியசாலைக்கு நிரந்தரமாக மருத்துவ சேவை வழங்குமாறு கோரி உணவு ஒறுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி வைத்தியசாலைக்கு மூன்று மருத்துவர்கள் கடமையில் ஈடுபட வேண்டிய நிலையில் ஒரு mbbs மருத்துவரும், ஒரு பதிவு வைத்திய அதிகாரியும் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களது சேவை தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் மக்களால் திணைக்களத்திற்கு பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியிலிருந்து இரண்டு மருத்துவரும் பணியில் இல்லாது விடுமுறையில் சென்றுள்ளனர்.

பொறுப்புவாய்ந்த மருத்துவர் எவரும் இல்லாத நிலையில் அவசர நோயாளர்கள் சிலர் காவுவண்டி மூலம் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் 24 மணி நேரமும் சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார திணைக்களம் உத்தரவாதம் தரும் பட்சத்தில் தாம் போராட்டத்தை கைவிடவுள்ளதாகவும் அவ்வாறு உத்தரவாதம் ஏதும் தராதபட்சத்தில் தமது போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் மருதங்கேணி வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க பொருளாளரும், தமிழர் விடுதலை கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை பொருளாளருமான வே.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.