நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்: சீ.யோகேஸ்வரன்

Report Print Kumar in சமூகம்

இலங்கையில் இந்து சமய பாடம் பாடசாலைக்கல்வியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதனால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்திற்கமைய வெளியிடப்பட்ட நீதி நூற்தொகுதிகளின் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சும் இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த நூல் தொகுதியை வெளியிட்டு வைத்துள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சீ.யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில்தான் சமய பாடம் ஒரு பாடமாக பாடசாலைக்கல்வியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற இந்து சமயம் வளர்ந்த நாடுகளில் பாடசாலைக் கல்வியில் சமயபாடம் இல்லை.

அந்தவகையில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனாலும் அது ஒரு பரீட்சைக்குரிய சமயக்கல்வியாக மாற்றப்பட்டுள்ளது.

மனிதனை முழு மனிதனாக மாற்றுவதற்கு இந்த அறநெறிக்கல்வியானது தனியாக போதிக்கவேண்டியது அவசியமாகின்றது.

இலங்கையில் உள்ள அனைத்து சமயங்களும் அதற்கு முன்னுரிமையளிக்கின்றன. அதனால் தான் அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிறிஸ்தவ மதத்தினை எடுத்துக்கொண்டால் அந்த மதத்தின் மதகுருமார்கள்தான் அந்த மதத்தினை போதிப்பார்கள்.

ஏனைய மதங்களும் அவ்வாறு தான் மதகுருமார்களே அந்ததந்த மதங்களை போதிக்கின்றனர். ஆனால் இந்து மதத்தினைப் பொறுத்தவரையில் எத்தனைபேர் அந்த மதத்தினை போதிக்கின்றார்கள் என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.