இலங்கையில் பெண்களுக்கான பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க எதிர்வரும் 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சேவை பெண்கள் மீதான துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாகவே அறிமுகப்படுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சேவையானது, தெரிவு செய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அலுவலக நேரங்களில் இந்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பேருந்து சேவை கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பேருந்துகளை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.