யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு வவுனியா பொது அமைப்புக்கள் ஆதரவு!

Report Print Theesan in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிபடுத்த கோரியும், மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்ககூடாது என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பை கோரும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வவுனியாவில் அமைந்துள்ள வாடி வீடு மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் பல்வேறு குழுக்களாக பிரிந்துசெயற்படுகின்றமை, மற்றும் தன்னிச்சையாக செயற்படுகின்றமை தொடர்பாகவும், அவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவினை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந் நிலையில் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த வவுனியா வர்த்தகர்சங்கம், வவுனியா வரியிறுப்பாளர்சங்கம் ஆகியன குறித்த போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது அமைப்புகள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இவ் போராட்டத்திற்கு வவுனியாவிலிருந்து போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.