சிலாவத்துறையில் 22ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் மக்கள்

Report Print Ashik in சமூகம்

முசலி - சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்க கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

தமது காணிகளை மீள தம்மிடமே வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20ஆம் திகதி மாலை முதல் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகையில்,

முசலி பகுதியில் அதிகளவான அரச காணிகள் இருக்கும் போது எங்களுக்கு சொந்தமான, காணி உறுதியுள்ள காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுகின்றது.

அதேநேரத்தில் எமது போராட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில் பிரதேச செயலாளரோ அல்லது மாவட்ட அரசாங்க அதிபரோ இது தொடர்பாக எங்களை சந்திக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை.

போராட்டம் தொடங்கிய அன்றே முசலி பிரதேச செயலாளரிடம் நாம் மகஜர் கையளித்துள்ள போதும் இதுவரை பிரதேச செயலாளர் எங்களை சந்திக்காமையானது மிகவும் வேதனையளிக்கிறது.

எந்த அதிகாரிகள் வாராது விட்டாலும் சரி எங்கள் காணிகளை மீட்கும் வரை போரட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.