தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்படும் முன்னாள் போராளிகள்

Report Print Nesan Nesan in சமூகம்
72Shares

முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனரும் முன்னாள் போராளியுமான கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தொடர் விசாரணையின் பேரில் முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் அழைக்கப்படுகின்றமை தொடர்பாக இன்று தனதில்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் நாளை கொழும்பில் உள்ள நான்காம் மாடிக்கு விசாரணைக்காக எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இது மூன்றாவது தடவை. இதற்கு முன்பும் கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு சென்றிருந்தேன்.

அதற்கு முன்பு பத்தாம் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு தலைமைக் காரியாலயத்திற்கு சென்றிருந்தேன். இவ்வாறான விசாரணைகள் ஏன் என்பது குறித்து எந்தவித பதிலும் இல்லை. தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைகள் என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர்.

எனது மூன்று மாத காலப்பகுதியில் செயற்பாடுகள் தொடர்பாக விசாரித்து பதிவு செய்கின்றனர்.

ஏன் என எங்களுக்கு விளக்கவில்லை. முன்னாள் போராளி என்றா அல்லது மக்களுக்காக சேவை செய்கின்றமையினால் விசாரிக்கப்படுகின்றனர் ஏன் என்று விளக்கவில்லை. முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்துவதை காணக்கூடியதாகவுள்ளது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலையிலும் சமாதானம், நல்லிணக்கம் என்ற காலகட்டத்திலும் ஏன் முன்னாள் போராளிகள் மீது திட்டமிட்டு இவ்வாறான விசாரணைக்கு அழைக்கின்றனர் என புரியவில்லை.

இத்தொடர் விசாரணை அழைப்புத் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு, செஞ்சிலுவைச்சங்கம், ஐ.நா சபை மனித உரிமையகத்திற்கும் என்னுடைய அறிக்கையினை கொடுத்துள்ளேன்.

அதற்குரிய பதில்கள் தற்போது வரை கிடைக்கப்பெறாத நிலையாகவே இருக்கின்றது. இருப்பினும் நான் என்னுடைய நிலைமைகள் தொடர்பாக மேற்குறிப்பிட்ட அமைப்புகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.

இந்தவிசாரணைகள் எதற்காக நடைபெறுகின்றது என தெரியவில்லை. ஆனால் அதனை கண்டறியவேண்டிய தேவையிருக்கின்றது.

முன்னாள் போராளி என்றவகையில் பல போராளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.