பீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு இணைந்து செய்யும் செயற்பாடு

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
21Shares

பீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு ஆகியன இணைந்து அமைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக திட்டம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் நாளை காலை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இது குறித்து பீனா அமைப்பின் தலைவா் டாக்டா் எச்.சி.அருண அபேகோனேவதன இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

பீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் கீழ் உள்ள சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு ஆகியன இணைந்து இந்த குடிநீா் விநியோக திட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றன. இதன் ஊடாக பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் தமது அன்றாட குடிநீா் தேவைக்கான நீரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த குடிநீா் திட்டத்தினை பராமரிப்பதற்கும் குடிநீா் விநியோகத்தை கண்காணிப்பதற்றுமான பொறுப்பு இலங்கை கடற்படையினரிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவா்கள் அதனை செவ்வனே செய்து முடிப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீரை மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்றால்போல் பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்யப்பட்டிருக்கின்றது.

காலையிலிருந்து மாலை வரை நீரை பெற்றுக் கொள்ளலாம். எனினும் பாரிய பவுசா்கள், கொள்கலன்களில் குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு தேவை எனில் எழுத்து மூலம் விண்ணப்பித்து தமக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ள முடியும். இந்த குடிநீா் திட்டம் அதனோடு இணைந்த நீா் துய்மையாக்கும் தொகுதிகள் ஆகியன சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த குடிநீா் திட்டத்தின் பாராமாரிப்புக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் தேவைப்படும். அந்த பணத்தை அரசாங்கம் வழங்குகின்றது. இதுபோன்ற குடிநீா் திட்டங்களை வேறு இடங்களில் ஆரம்பிப்பதற்கு 2500 பேருக்கு மேல் ஒன்று கூடும் இடங்கள் இருப்பின் அந்த இடங்களுக்கு பொறுப்பானவா்கள் அதற்கான விண்ணப்பங்களை செய்யலாம் என்றார்.