புகலிடம் கோரி வெளிநாடு சென்ற இலங்கை படையினர்!

Report Print Murali Murali in சமூகம்
792Shares

இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் நிறைவடையப்போகும் சூழலிலும், வெளிநாடுகளில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சிகள் தொடர்ந்து வருவது தவிர்க்கப்பட முடியாத பிரச்னையாகவே இருக்கின்றது.

அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தென் இலங்கையிலிருந்து நியூசிலாந்து நோக்கி செல்ல முயன்ற படகு பிடிபட்டதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் பொலிஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நியூசிலாந்து செல்ல முயன்றவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 3 பேரும் விமானப்படையில் முன்பு அங்கம் வகித்த 2 பேரும் இருந்தது அம்பலமாகியுள்ளது.

அதில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் கல்லி, புத்தளம், கண்டி, இரத்னபுரி, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகையில் இவர்கள் தஞ்சக்கோரிக்கையாளர்களாக பார்க்கப்பட்டாலும் சட்டரீதியாக இவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே தற்போது அடையாளப்படுத்துகின்றனர்.

இதேபோல், கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு செல்ல முயன்ற 70 பேர் கொண்ட படகு, அத்தீவுக்கு சென்றடைந்த பின் அதிலிருந்தவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

சமீப ஆண்டுகளாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது.

கடந்த காலங்களில் இப்படி சென்றடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.