மன்னாரில் வாடிக்கையாளர் தினம்! மக்களிடம் முக்கிய கோரிக்கை

Report Print Ashik in சமூகம்

உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின் நீர் பட்டியல் மற்றும் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாளைய தினம் மன்னாரில் வாடிக்கையாளர் தினம் நடத்தப்படவுள்ளது.

இதனை நடத்த தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கான சில சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில் வாடிக்கையாளரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், அதற்குரிய தீர்வுகளை மிக விரைவாக பெற்றுக் கொடுத்தல், வாடிக்கையாளரின் நீர் பட்டியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தல், சபையினால் வாடிக்கையாளரின் வசதி கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைகள் சம்பந்தமாக அறிவூட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சமூகமளித்து தங்களது தேவைகளுக்குரிய தீர்வினைப் பெற்று செல்லுமாறு வாடிக்கையாளர்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.