விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலை! வைத்திய அதிகாரியின் குற்றச்சாட்டு

Report Print Sumi in சமூகம்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை புனரமைத்து சேவையினை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளனர் என யாழ். மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி யமுனானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்,

ஊடகவியலாளர்களை இன்றைய தினம் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கடந்த வருடம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையானது தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் அந்த மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை புனரமைத்து மீள ஆரம்பிப்பதற்கான எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அரச அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக அந்தக் காணியினை வேறொரு தேவைக்கு பயன்படுத்த உள்ளதால், அதனை காசநோய் மருத்துவமனை அமைப்பதற்கு பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் விரும்பவில்லை.

எனினும் இந்த காச நோய் வைத்தியசாலை ஆரம்பிப்பதன் மூலமே வடக்கில் காச நோயை கட்டுப்படுத்த முடியும். காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும்.

அத்தோடு கடந்த வருடம் சுமார் 303 பேர் காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதேபோல் இந்த வருடம் சுமார் 66 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் காசநோயால் பாதிக்கப்பட்ட 303 பேரில் 12 பேர் இறப்பினை சந்தித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.